Wednesday, June 25, 2008

கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தமுமுகவினர் 500 பேர் கைது



கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை புறநோயாளிகளும், ஆயிரத்து 500 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டம் மட்டுமல்லாது ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாக போக்கை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி முன்பு 24-ந் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி தமுமுக அறிவித்திருந்தது. இவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்க வில்லை. போலீசார் அனுமதி கொடுக்கவிட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று த.மு.மு.க. அறிவித்தது.இதை தொடர்ந்து நேற்று (24-06-08) காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் பீரங்கி வண்டிகள், வஜ்ரா வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்தன.ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் வரை த.மு.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான த.மு.மு.க.வினர் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள பஸ்நிலையம் முன்பு குவியத்தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பின்னர் 11.15 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ஏ.அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் எம்.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் இ.அகமது கபீர், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.காதர் உசேன், துணை செயலாளர் எஸ்.நூர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில செயலாளர் உமர் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே "திடீரென்று" ஒருவரை ஸ்டெச்சரில் படுக்க வைத்த நிலையில் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைசேர்ந்த 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் அவினாசி சாலையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய த.மு.மு.க. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் கூறியதாவது:- அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வசதி படைத்தவர்கள் வருவதில்லை. தினக்கூலிகளாகவேலை பார்ப்பவர்கள் தான் வருகிறார்கள். பஸ்கட்டணத்திற்கே கடன் வாங்கி வரும் வறிய நிலையில் இருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது இறைவனுக்கு அளிக்கும் தொண்டாகும். கோவை அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தை செம்மை படுத்த வேண்டும். பெண்கள் வார்டு கழிவறைக்கு சென்றால் இல்லாத நோயெல்லாம் வந்து விடும் நிலையில் உள்ளது.பிணவறையில்பல நாட்களாக குளிர்சாதன பெட்டி இயங்க வில்லை. இதனால் பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எம்.ஆர்.ஐ.ஸ்கேன்வசதி இருந்தும் அதை இயக்க ஊழியர்கள் இல்லை.பிரசவ வார்டில் 50 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். நரம்பியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் படுக்கைகள் மோசமான நிலையில்உள்ளன. இவற்றை எல்லாம் சீர்படுத்தக்கோரிதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் விரைவில் நல்ல முடிவு எடுக்க வில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் விரிவு படுத்தப்படும்.
இவ்வாறு என்.கே.அஷ்ரப் கூறினார்.
பதிப்பு : தமுமுக.

No comments: