Friday, May 16, 2008

ஜெய்பூர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கிலிட தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்து சமூகப் பெருமக்களின் வழிப்பாட்டுத் தலம் உள்பட பொது மக்கள் கூடுகின்ற இடங்களில் நடைபெற்ற இந்த மனித நேயமற்ற குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் இருக்க முடியும். இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உச்சப்பட்சத் தண்டனையான தூக்குத் தண்டை விதிக்க வேண்டுமென தமுமுக கோருகிறது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் காவல்துறை சரியான குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறிக் கொள்கிறது. ஆனால் சரியான முறையில் விசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் அப்பாவிகளைக் கைது செய்து கணக்கு காட்டுவதால் தான் இந்தப் பயங்கரவாத தாக்குதல்கள் தொடருகின்றன. எனவே மத்திய அரசு இந்த உண்மைகளை கவனத்தில் கொண்டு நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு சரியான குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் ஜெய்பூரில் நடைபெற்றது போல துயரச் சம்பவங்கள் இனியும் தொடராமல் தடுக்க இயலும்.