Monday, May 25, 2009

வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை ! நிகழ்காலம் கைவிட்டிருக்கலாம் எதிர்காலம் நமதே! இன்ஷாஅல்லாஹ் !!!

15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம்.
எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப்பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
பணபலமும், படைபலமும் கொண்ட இக்கட்சி கள் கூட்டணி பலத்துடன் நின்று தோல்வியைத் தழுவியிருக்கும் போது மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது ஆச்சரியமில்லை.
அரசியலில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. திமுக 1957ல் போட்டியிட்டபோது, வெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல்வி அடைந் தது. டெபாசிட்டை பறிகொடுத்தது.
1991ல் பா.ம.க. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி யில் வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல் வியை சந்தித்து டெபாசிட்டை இழந்தது.பல அரசியல் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. பலர் படுதோல்விகளை சந்தித்திருக்கிறார்கள்.
டெபாசிட் தொகைகளை இழந்த கட்சிகள் பின்னாளில் ஆளுங்கட்சிகளாகவும், எதிர்க்கட்சிகளாகவும் அதிகாரத்தை ஆட்டுவிக்கும் கட்சிகளாக வும் மாறியிருக்கின்றன.
இன்று தமிழகத்தில் பிரபல கட்சியாகத் திகழும் தே.மு.தி.க. இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது.
கட்சி ஆரம்பித்து தொடர் தோல்விகளை சந்தித்த மதிமுக வெகு காலத்திற்குப் பின்புதான் அரசியல் அங்கீகாரம் பெற்றது.
1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திமுக தப்பிப் பிழைத்தது.
1984 தேர்தலுக்குப் பின்னால் உ.பி. மாநிலத்தில் படுதோல்விகளையும், மந்தமான வாக்குகளையும் பெற்றுவந்த காங்கிரஸ் இப்போதுதான் 20 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா போன்ற பிரபலங்கள் எல்லாம் தேர்தலில் தங்கள் தொகுதி களில் தோற்றவர்கள் என்பதை நினைவூட்டு கிறோம்.
மாபெரும் அறிவுஜீவிகளாக கருதப்படும் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டவர்கள் என்பதும், பிறகு அவர்கள் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் ஆனார்கள் என்பதும் வரலாறு.
இன்று பிரபல தலைவர்களாக உள்ள ஸ்டாலின், ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் களத்தில் தோல்வி கண்டு மீண்டவர்கள்தான்.
தேர்தல் களம் என்பது தோல்வி, படுதோல்வி, விரக்தி, ஏமாற்றம் இவையாவையும் உள்ளடக் கியது என்பதை மறந்துவிடலாகாது. இதை ஒரு சவாலாக ஏற்றால்தான் அடுத்த வெற்றிகளைக் குவிக்க முடியும்.
தேர்தலைப் பற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டவர்களுக்கும், போராட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டு லட்சியத்துக்காக அரசியலுக்கு வந்திருக்கும் ம.ம.க. தொண்டர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
இனிதான் நமக்கு பணிகள் அதிகமாக காத்திருக் கிறது. காடுகளைக் கடந்து விட்டோம். இனி மேடுகளைத் தாண்ட வேண்டும்.
போர் வீரர்களுக்கு ஓய்வில்லை. ம.ம.க.வினருக்கு தோல்வி இல்லை.

நன்றி : த.மு.மு.க இணையத்தளம்.

No comments: